நமக்கு தலைவலி வந்தால், அதைப் பற்றி பெரிதாக யோசிக்க மாட்டோம். வலியை போக்க தைலம் எதையாவது தேய்த்துக்கொள்வோம், இல்லாவிட்டால், மாத்திரை ஒன்றை விழுங்கிவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிடுவோம். இதேப்போன்ற சாதாரண தலைவலிதான் தனக்கும் வந்துள்ளது என நினைத்துக் கொண்டிருந்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதுப் பெண் ஒருவர். ஆனால் அவருக்கு தலைவலி வந்ததற்கான காரணம் அவ்வுளவு லேசானதல்ல என்பது பின்புதான் தெரிய வந்தது.
அந்தப் பெண்ணின் மூளைக்குள் 8 செமீ நீளம் கொண்ட ஒட்டுண்ணியான புழு ஒன்று இருந்துள்ளது. நினைத்துப் பார்க்கவே திகிலாக இருக்கிறது அல்லவா. வழக்கமாக இதுபோன்ற ஒட்டுண்ணிகள் மலைப்பாம்புகளில் தான் இருக்குமாம். மருத்துவ வரலாற்றில் இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தை கேள்விபட்டதேயில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த ஒட்டுண்ணியை அவரது மூளையிலிருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்துவிட்டனர்.
முதலில் பார்த்த போது என்னால் நம்பமுடியவில்லை. அந்தப் பெண்ணின் மூளைக்குள் அது உயிரோடு இருந்ததோடு மெதுவாக அசைந்து கொண்டிருந்தது எனக் கூறுகிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவரான டாக்டர்.ஹரிபிரியா பண்டி. இவரும் சஞ்சனா சேனநாயகே என்ற மருத்துவரும்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸில் வசித்து வரும் இந்தப் பெண்மணிக்கு 2021-ம் ஆண்டு தொடர்ந்து மூன்று வாரங்களாக கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. அதோடு சேர்த்து காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வறட்டு இருமல் மற்றும் இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் போன்ற வேறு பிரச்சனைகளும் இருந்துள்ளது. முதலில் உள்ளூர் மருத்துவமணை ஒன்றில் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் மன அழுத்தமும் மறதியும் இவருக்கு அதிகரித்துள்ளது. அதன்பிறகு தான் கான்பெரா மருத்துவமணைக்கு வந்துள்ளார்.
உடனடியாக இவரது மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது அசாதாரணமான செயல்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அறுவைசிகிச்சை செய்வதுதான் ஒரே வழி என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரு வழியாக எப்படியோ அவரது மூளைக்குள் இருந்து அந்த ஒட்டுண்ணியை வெளியே எடுத்துவிட்டார்கள். இதற்கு முன் எந்தவொரு மனதரின் மூளைக்குள்ளும் இந்த ஒட்டுண்ணி சென்றதில்லையாம்.
சரி, இந்த உருட்டுப் புழு எப்படி இவரது மூளைக்குள் சென்றிருக்க முடியும்? இவரது வீடு ஏரிக்கரையோரம் உள்ளது. இப்பகுதிகளில் நிறைய மலைப் பாம்புகளும் வசித்து வருகின்றன. இவர் பாம்போடு நேரடி தொடர்பு கொண்டிருக்காவிட்டாலும், அடிக்கடி ஏரிப் பகுதிகளுக்குச் சென்று அங்கு கிடைக்கும் புற்களை சேகரித்து வீட்டிற்கு எடுத்து வருவார். குறிப்பாக அங்குள்ள கீரைகளை பறித்து சமையலுக்கு பயன்படுத்துவார். புற்களின் மேல் தனது கழிவை மலைப்பாம்பு வெளியேற்றும் போது, இந்த ஒட்டுண்ணியும் அதோடு சேர்ந்து வந்திருக்கும் என மருத்துவர்களும் ஆய்வாளர்களும் சந்தேகிக்கின்றனர்.
ஒன்று, அந்தக் கீரையை சாப்பிடும் போது அவரது உடலுக்குள் சென்றிருக்க வேண்டும், இல்லையேல், புற்களின் மேலே இருந்த ஒட்டுண்ணியின் முட்டைகள், உணவு அல்லது சமையல் பாத்திரங்களின் வழியாக அவரது உடலிற்குள் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அறுவை சிகிச்சைப் பிறகு அந்த பெண்மணி நலமாக உள்ளார்.





















