முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங்குக்கு வாழ்நாள் தடை விதித்தது சிங்கப்பூர்

கோலாலம்பூர்:

லேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1MDB நிதி மோசடி விவகாரத்தில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதற்காக கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து சிங்கப்பூர் நாணய ஆணையம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.

அவருக்கு எதிரான வாழ்நாள் தடை உத்தரவு நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து நடப்புக்கு வந்தது.

இதனால் இங், வழக்கமான நிதி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. நிதி தொடர்பான ஆலோசனைகளையும் அவர் வழங்க முடியாது.

மலேசியரான இங் சோங் ஹுவா, நிறுவனத்தின் இயக்குநராகவோ பங்குதாரராகவோ சிங்கப்பூரில் சட்டப்படி செயல்பட அனுமதியில்லை.

கடந்த மார்ச் மாதம் நியூயார்க் நீதிமன்றம் இங்குக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டளை விதித்தது.

முன்னாள் கோல்ட்மேன் தலைவர் டிம் லீஸ்னர் மற்றும்  நிதியாளர் ஜோ லோ ஆகியோருடன் சேர்ந்து பல பில்லியன் டாலர் மோசடி தொடர்பாக அவர் கூட்டு சதியில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கூறியது.

இதற்கு லஞ்சமாக அவர் பல மில்லியன் டாலர் பெற்றுக் கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இங்கின் தவறான நடத்தையால் சிங்கப்பூரில் அவர் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிப்பது பொதுநலனுக்கு எதிரானது என்று சிங்கப்பூர் மத்திய வங்கி நம்புகிறது,” என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை கடைசி நிமிடத்தில் தாமதிக்கப்பட்டது.

1எம்டிபி தொடர்பான விசாரணையில் அவரது உதவி தேவைப்படுவதால் அவரை மலேசியாவுக்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனும் புத்ராஜெயாவும் பேச்சு நடத்துவதற்கு ஏதுவாக அவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

கோல்ட்மேனின் முன்னாள் தென்கிழக்கு ஆசியத் தலைவரான லீஸ்னர், அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்களுடனான ஒத்துழைப்பு உடன்பாட்டின் ஒரு பகுதியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு இங்குக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.

2018ஆம் ஆண்டில் அவர் இருபது மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரது தண்டனையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here