சிங்கப்பூர்:
மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 1.6 டன்னுக்கும் அதிக எடையுள்ள காய்கறிகளை சிங்கப்பூர் உணவு முகாமைத்துவ அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.
சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்ய பொதுவாக காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களைக் குறிவைத்து புதன்கிழமையும் வியாழக்கிழமையும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக உணவு முகாமைத்துவ அமைப்பும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் இரண்டு வாகனங்களைத் தடுத்து நிறுத்திய இந்த ஆணையத்தின் அதிகாரிகள், அவற்றை உணவு முகவை அமைப்பிடம் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த வாகனங்களில் தக்காளி, அவரை, காரட், சிவப்பு மிளகாய், கீரை, வெங்காயம் போன்ற 1.6 டன்னுக்கும் அதிக எடையுள்ள காய்கறிகள் இருந்ததை உணவு முகாமைத்துவ அமைப்பு கண்டது.
அவற்றை இரண்டு இறக்குமதியாளர்கள் தருவித்து இருந்தனர். ஆனால், அவர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை இறக்குமதியாகக்கூடிய உணவுப்பொருள்கள் உணவு முகாமைத்துவ அமைப்பின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே பழங்களையும் காய்கறிகளையும் இறக்குமதி செய்யலாம். காய்கறி, பழங்களை ஏற்றி வரும் வாகனங்கள் ஒவ்வொன்றிலும் செல்லுபடியாகக்கூடிய இறக்குமதி அனுமதி இருக்க வேண்டும். அவற்றில் என்னென்ன காய்கறிகள் இருக்கின்றன என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும்.
எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது தெரியாமல் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் காய்கறிகளால் ஆபத்து ஏற்படக்கூடும்.மேலும் அவற்றில் அதிகளவில் பூச்சு மருந்து கலந்திருக்கக்கூடும். அத்தகைய காய்கறி, பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அது வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தது.









