நம்மில் பெரும்பாலானவர்களின் வீட்டில் கற்றாழை செடி கட்டாயமாக வைத்திருப்போம். ஆனால் அந்த கற்றாழையை நாம் பயன்படுத்துகிறோமா என்பது தான் கேள்வியாக உள்ளது. கற்றாழையை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் நமக்கு கற்றாழையின் பயன்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
கற்றாழை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்தே மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையானது அதன் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் நீரை தக்க வைக்க கூடிய பண்புகளை கொண்டுள்ளது. கற்றாழையை நாம் வெட்டியவுடன் அதிலிருந்து மஞ்சள் நிற, கசப்பு தன்மை கொண்ட ஒரு திரவம் வெளியேறும். இது மரப்பால் அல்லது ஆங்கிலத்தில் லேடெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த லேடெக்ஸ் நச்சுத்தன்மை கொண்டது. எனவே நாம் கற்றாழையை பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய அழகு சாதன பொருட்கள் பலவற்றில் கற்றாழை சேர்க்கப்பட்டுள்ளது. லோஷன்கள் மற்றும் கிரீம்களில் சேர்க்கப்பட்டுள்ள கற்றாழை சருமத்தை மேம்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. செயற்கையான பொருட்களைக் காட்டிலும் ஃபிரஷான கற்றாழையை நேரடியாக பயன்படுத்தலாம்.
கற்றாழையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. A, C, E மற்றும் B காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், சின்க் போன்ற மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை கற்றாழையில் நிறைந்துள்ளது.சரியான முறையில் தயாரிக்கப்படும் பொழுது கற்றாழையிலிருந்து வெளிவரும் லேடெக்ஸை மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இயற்கை தீர்வாக பயன்படுத்தலாம்.
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தவிர கற்றாழையில் ஆன்டி ஆக்சிடன்டுகளும் நிறைந்துள்ளது. இவை நமது உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிற ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடக்கூடிய தன்மை கொண்டுள்ளன.கற்றாழை செடியை நம் வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிது. இதற்கு அதிக அளவிலான பராமரிப்பு தேவையில்லை. கற்றாழையை வீட்டிற்கு உட்புறமும் வெளிப்புறமும் தாராளமாக வளர்க்கலாம்.
























