நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் சருமப் பராமரிப்பு வணிகத்தில் தொழில்முனைவர் டெய்சி மோர்கன்

திரையுலக நட்சத்திரத் தம்பதியர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து சருமப் பராமரிப்பு வர்த்தக உலகுக்குள் தமது புதிய ‘9Skin ’ வர்த்தகம் மூலம் சிங்கப்பூரின் உள்ளூர் தொழில்முனைவரான 43 வயது டெய்சி மோர்கன் அடியெடுத்து வைக்கவுள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் காண்கின்றன ‘9Skin’ பொருள்கள்.

டெய்சி இந்தியாவிற்குச் சென்றிருந்தபோது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் நட்பு கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீடித்துள்ள அவர்களது வலுவான நட்பும் டெய்சியின் வர்த்தக அனுபவங்களும் ‘9Skin’ வணிகத்தின் பிறப்பிற்கு அடித்தளமாக இருந்ததாகக் கூறினார் டெய்சி.

‘9ஸ்கின்’ சருமப் பராமரிப்பு பொருள்களில் ஆயுர்வேத மூலப்பொருள்களும் சருமத்திற்கு மெருகூட்டும் நவீன அறிவியல் மூலப்பொருள்களும் அடங்கியுள்ளன. மேலும், ‘9Skin’ பொருள்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ‘பாரபென்’ (Paraben), ‘சல்பேட்டு’ (sulphate) போன்ற ரசாயனப் பொருள்களின்றித் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்து சருமங்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் புதிய சருமப் பராமரிப்பு வணிகம் பிறந்ததற்கு முக்கியக் காரணம் விக்னேஷ் சிவன் என்றார் டெய்சி. சருமப் பராமரிப்பு பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நாட்டம் வந்ததற்கு நயன்தாரா முக்கியப் பங்கு வகித்தார். பெண்களின் வாழ்வை இன்னும் எளிமையாக்கும் சருமப் பராமரிப்புப் பொருள்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பிய விக்னேஷ் சிவன், அதே கனவுடன் இருந்த நயன்தாரா டெய்சியுடனும் இவ்வணிகத்தைத் தொடங்க முடிவெடுத்தார்.

‘செபோரா’ நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் கூடிய விரைவில் ‘9Skin’ பொருள்களை விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறிய டெய்சி, அவை இம்மாதம் 29ஆம் தேதியன்று லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள ஜோதி புஷ்பக்கடையில் கிடைக்கும் என்றார்.

மேலும் இந்த தயாரிப்புக்கள் மலேசியா, இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலும் விற்கப்படும். நவம்பர் மாதம் முதல் அவற்றை ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது ஆறு இரவு கேளிக்கைக் கூடங்களுக்கு உரிமையாளராக இருக்கும் டெய்சி, தமது இளம் பருவத்தில் சருமத்தைப் பராமரிப்பதில் ஒரு சில சவால்களைச் சந்தித்தார். அதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டுமென எண்ணியபோதுதான் சருமப் பராமரிப்பில் ஆர்வம் கொண்டார் டெய்சி.

முதலில், இந்த ஆர்வம் அவரை ஓர் அழகுக்கலை நிபுணராக்கியது. பின்னர் 2004ஆம் ஆண்டில் இவர் ‘கிரியேட்டிவ் பியூட்டி சலூன்’ என்ற தம் சொந்த அழகுப் பராமரிப்பு நிலையத்தைத் தொடங்கினார். சிங்கப்பூரோடு நிறுத்திவிடாமல் 2008ஆம் ஆண்டில் டெய்சி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அழகுப் பராமரிப்பு நிலையங்களைத் திறந்து தம் வணிகத்தை விரிவுபடுத்தினார்.

ஏழு ஆண்டுகளுக்கு அழகுப் பராமரிப்புத் துறையிலிருந்த அவர், தமது மணவாழ்வில் சில கசப்பான சம்பவங்களை அனுபவித்தார். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வணிகத்தில் அதிக கவனம் செலுத்தவும் மணவிலக்கு பெற்றார்.

அந்தக் காலகட்டத்தில் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராக இருந்த அவர், இரவுக் கேளிக்கைக்கூடத் துறையில் பெயர் பெற வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார். மலேசியாவில் ‘செலிபிரிட்டி’ என்னும் இரவுக் கேளிக்கைக் கூடத்தை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக சிங்கப்பூரின் பிரபல இரவுக் கேளிக்கைக் கூடங்களுக்கு உரிமையாளராகி, அத்துறையில் பெயர் பதித்தார்.

இதற்கிடையே, டெய்சி தம் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கவும் நேரம் ஒதுக்குகிறார். அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை எந்நேரமும் கருத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

“வீட்டில் இருக்கும் போதெல்லாம் எனது பிள்ளைகளுக்காக நிச்சயம் சமைப்பேன். முடியாதபோது என்னுடைய நண்பர்கள் என் பிள்ளைகளை நன்கு பார்த்துக்கொள்வார்கள், அல்லது பிள்ளைப் பராமரிப்பாளர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்வேன்,” என்றார் டெய்சி.

மலேசியாவில் வசிக்கும் இவர், இந்தியாவில் குடியேற விரும்புவதாகத் தெரிவித்தார். பல்வேறு சவால்களைத் தாண்டி இன்று ‘9ஸ்கின்’ உருவாவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ள டெய்சி, இவ்வணிகத்தைத் தொடங்கியதில் தாம் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here