புள்ளி விவரச் சட்டத்தில் திருத்தங்கள் 2024இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

கோலாலம்பூர்:

1965 புள்ளி விவரச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. நாட்டின் புள்ளி விவரத்துறையைப் பலப்படுத்துவதில் மலேசியப் புள்ளி விவரங்கள் இலாகாவின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு அதன் தொடர்பான மசோதா 2024 ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும்.

உலகப் பொருளாதாரம், சமூக நலன், சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற மாறிவரும் சுழ்நிலையின் அடிப்படையில் புள்ளி விவரங்களில் அவசியமிக்க தகவல்களை இணைப்பதற்கு மலேசிய புள்ளி விவரங்கள் இலாகா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்று இலாகா தலைவர் டத்தோஸ்ரீ முகமட் உஸிர் மஹிடின் கூறினார்.

தேசியப் புள்ளி விவரங்கள் துறையைப் பலப்படுத்தும் திட்டத்தை மலேசியப் புள்ளி விவரங்கள் இலாகா முன்னெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களைச் செய்வதற்குரிய அதிகாரத்தை அரசாங்கம் இலாகாவுக்கு வழங்கி இருக்கிறது என்று அவர் சொன்னார்.

தேசியப் புள்ளி விவரங்கள் முறையில் புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதோடு முடிவெடுப்பதில் உள்ள நடைமுறையை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்று இங்கு 10ஆவது மலேசியப் புள்ளி விவரங்கள் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தியபோது முகமட் உஸிர் சுட்டிக்காட்டினார்.

மலேசியப் புள்ளி விவரங்கள் துறை வரலாற்றைப் பட்டியலிட்டுக் காட்டிய அவர், உள்நாட்டு நிகர உற்பத்தி தொடர்பான தகவல்கள் ஙே்கரிப்பு 1961ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில் இந்த இலாகா புள்ளி விவரங்கள் வாரியம் என அழைக்கப்பட்டது.

விவசாயத்துறை, பெட்ரோலிய உற்பத்தி மேலும் சில முக்கியத் துறைகள் மீது கவனம் செலுத்தும் வகையில் முதன் முறையாக அவை தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

1970ஆம் ஆண்டுகளில் பொருளாதாரக் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை அதிகமான விவரங்களுடன் வெளியிடுவதற்கு புதிய முறையை அமல்படுத்தத் தொடங்கியது. இதன் கீழ் நிகர உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடும் முறை பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

1980ஆம் ஆண்டுகளில் நிகர உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் விரைவான மேலும் துல்லியமான புள்ளி விவரங்களைத் தரும் வகையில் புதிய தரவு சேகரிப்பு முறையை இலாகா பயன்படுத்தத் தொடங்கியது. 1993ஆம் ஆண்டில் பொருளாதாரத் தரவுகள், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உதவுவதற்கு தேசிய கணக்கியல் முறையை அடிப்படையாகக் கொண்டு நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் தொகுக்கப்பட்டன.

அன்று முதல் இன்று வரை மலேசியா இந்த நடைமுறைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி வருகிறது என்று முகமட் உஸிர் கூறினார்.

1990ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மலேசியா முதன்முறையாக நிகர உற்பத்தி தரவுகளை 4 மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் தொகுக்கத் தொடங்கியது. இதற்கு நியூசிலாந்தைச் சேர்ந்த ரோட்னி மெலிங்டன் என்ற நிபுணத்துவ ஆலோங்கரின் உதவி நாடப்பட்டது.

நாட்டின் பொருளாதார குறியீட்டுக்கு நிகர உள்நாட்டு உற்பத்தி புள்ளி விவரங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்ற போதிலும் மக்களுக்கு உண்மையான நிலவரத்தைச் சொல்ல இயலாமல் போனது.

இவற்றைச் சரி செய்வதற்குத்தான் புதிய அணுகுமுறைகளும் கோட்பாடுகளும் தகவல்கள் சேகரிப்பில் துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டன. நிகர உள்நாட்டு உற்பத்திக்கு அப்பாற்பட்ட நிலையில் அளவீடு கட்டமைப்புக்கு புள்ளி விவரங்களின் தேவை அவசியமாக இருந்தது. கொள்கை வகுப்பாளர்கள், அரசாங்கங்கள், கல்வித்துறைகள், பொதுமக்கள் என ஒவ்வொரு துறைக்கும் தெளிவான, துல்லியமான புள்ளி விவரங்கள் தேவைப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.

நடப்புச் சுழ்நிலையில் விரிவான மேலும் ஆழமான புள்ளி விவரங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்று முகமட் உஸிர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here