நாளுக்கு நாள் மோசமடையும் புகைமூட்டம்

கோலாலம்பூர் :

ஆசியான் நாடுகளில் காற்றுத் தூய்மைக்கேடு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதாவது எச்சரிக்கை நிலை 2க்கு உயர்த்தும் அளவுக்கு காற்று மாசுபட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசியான் நாடுகள் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கு எதிராக தயாராகி வருகின்றன. மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களாகவே மிதமான அளவு அடர்த்தியான புகைமூட்டம் காணப்படுகிறது.

கலிமந்தானிலிருந்து வரும் புகை, அடுத்த சில நாட்களில் சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான் மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளின் காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கும் என்று மலேசிய வானிலை நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.

ஆசியான் சிறப்பு வானிலை நிலையத்தில் (ஏஎஸ்எம்சி) சனிக்கிழமை பதிவான துணைக்கோள படங்களை சுட்டிக்காடிய அவர், மலேசியா முழுவதும் புகைமூட்டத்தை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார்.

“இருப்பினும் கலிமந்தானில் 353 இடங்களில் காட்டுத் தீ மூண்டுள்ளன. சுமத்ராவில் மட்டும் 113 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

தீபகற்ப மலேசியாவுக்கு அருகில் உள்ள இந்தோனீசியப் பகுதியான சுமத்ராவிலும் எச்சரிக்கை நிலை 2க்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஏஎஸ்எம்சி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது.

இதற்கிடையே காற்றின் தரத்தை கண்காணிப்பது, குறிப்பாக திறந்தவெளியில் எரிப்பது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது, வறண்ட நிலப் பகுதிகளில் தீ மூள்வதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மலேசியாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here