தோக்கியோ:
இன்று வியாழக்கிழமை (அக். 5) காலையில், ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து இரண்டாம் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பானின் தோக்கியோ மின்சக்தி நிறுவனம் (டெப்கோ) வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
இது அடுத்த 17 நாள்களுக்கு ஏறக்குறைய 7,800 கன மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை அது வெளியேற்றும். வெளியேறும் இந்தக் கழிவுநீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேரும்.
இந்நிலையில் இதனால் மனிதர்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ ஆபத்து நேராது என்று ஐக்கிய நாட்டு நிறுவன அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அணுசக்தி அமைப்புகள் கூறுகின்றன.
இருப்பினும் ஜப்பானின் இந்த நடவடிக்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ..
முன்னதாக ஆகஸ்ட்டில் ஜப்பான் இத்தகைய கழிவுநீரை வெளியேற்றியபோது, ஜப்பானிய கடலுணவுப் பொருள்கள்மீது சீனா ஒட்டுமொத்தத் தடை விதித்தது.
ஜப்பானிய நிறுவனங்களுக்குப் பல்வேறு தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டன. அவை சீனாவிலிருந்து விடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.
ஃபுக்குஷிமா அணுமின் நிலையம், 2011ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டது. அதிலிருக்கும் நீரில் இருந்து பெரும்பாலான கதிரியக்கப் பொருள்கள் சுத்திகரிக்கப்பட்டதாக ஜப்பான் கூறுகிறது.
ஆகஸ்ட் மாதம் முதற்கட்டக் கழிவுநீர் வெளியேற்றத்திற்குப் பிறகு பிரச்சினைகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்கிறது டெப்கோ.