சீன சமூகத்தினர், குறிப்பாக டெலிமாங் மற்றும் கம்போங் பாரு வாழ்மக்கள் இந்த சனிக்கிழமை பெலாங்காய் மாநில இடைத்தேர்தலில் வாக்களிக்க செல்ல மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக் மறுத்துள்ளார்.
பாரிசான் நேஷனல் (BN) வெற்றியை உறுதி செய்வதற்காக தொகுதியில் வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய டிஏபி இயந்திரம் கடுமையாக உழைத்து வருவதாக அவர் கூறினார்.
டெலிமாங் என்பது பெலாங்காய் தொகுதியில் மலாய்க்காரர்கள் அல்லாத பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதி. இப்பகுதியில் சுமார் 4,000 மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் உள்ளனர். இந்த சனிக்கிழமை நாங்கள் எங்களிடம் உள்ள (டிஏபி) வாக்குகளை உறுதி செய்வோம். அவற்றை BN-க்கு மாற்றுவோம். இதன் மூலம் BN வெற்றிபெறுவதற்கு நாங்கள் உதவுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று நேற்றிரவு டெலிமாங் டாங் லுங் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சிலாங்கூர் ஷா ஆலமில் நடந்த விமான விபத்தில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் (53) இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் (GE15), பிஎன் சார்பில் ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் காசிம் சமாட் (3,260) வாக்குகள், பக்காத்தான் ஹராப்பானின் அகமது வஃபியுதீன் ஷம்சூரி (2,031 வாக்குகள்) பெஜுவாங் வேட்பாளர் இசா அகமது (65 வாக்குகள்). பெற்றிருந்தனர்.
லோக்கின் கூற்றுப்படி, பிரச்சாரக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே, பகாங் டிஏபிக்கு மன உறுதி, வளங்கள் மற்றும் ஆள் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் BNக்கு ஆதரவளிக்கும் வகையில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடும்.