ரிங்கிட் பயன்பாட்டை அதிகரிக்கும் வழிகளை மலேசியா ஆராய்கிறது- பிரதமர்

கோலாலம்பூர்:

வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக மலேசிய ரிங்கிட்டை பயன்படுத்துவதற்கான வழிகளை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான உலக வர்த்தகங்களில் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒப்புக் கொண்ட அன்வார், பல நாடுகளுடனான வர்த்தகத்தில் ரிங்கிட்டைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகக் கூறினார்.

“வர்த்தகத்திற்கு உள்ளூர்ப் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து சீனா, ஆசியான் நாடுகளுடன் பேசியிருக்கிறேன். இதற்கு சீனா நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது. பில்லியன் கணக்கான முதலீடுகளில் ஏறக்குறைய 28 விழுக்காட்டில் அமெரிக்க டாலரை பயன்படுத்த மாட்டோம். ரிங்கிட்டைப் பயன்படுத்துவோம்,” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹவாங் ஹஷிம் கேட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

சீனாவைத் தவிர இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் ரிங்கிட்டைப் பயன்படுத்த வெற்றிகரமாக பேச்சு நடத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங்கின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அன்வார், அரசாங்கம் தொடர்புள்ள பெரும்பாலான முதலீட்டு நிறுவனங்களும் பல உள்ளூர் தனியார் நிறுவனங்களும் தங்களுடைய பரிவர்த்தனைகளில் ரிங்கிட் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

“எல்லாப் பரிவர்த்தனைகளும் டாலரில் செய்யப்பட்டால் ரிங்கிட்டுக்கு அது பெரிய சவாலாக இருக்கும். அதனால் சில நிறுவனங்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளில் 70 விழுக்காடு வரை ரிங்கிட்டைப் பயன்படுத்துகின்றன,” என்றும் அன்வார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here