ஜோகூர் – சிங்கப்பூர் கடல் எல்லைகளை மறுவரையறை செய்யத் தேவையில்லை

கோலாலம்பூர்:

தெப்ராவ் – சிங்கப்பூர் இடையிலான ஜோகூர் நீரிணையில் கடல் எல்லையை மறுவரையறை செய்யும் திட்டம் இல்லை என்று மலேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் முகமட் அலாமின் தெரிவித்துள்ளார்.

மலேசியாவும் சிங்கப்பூரும் 1995ல் வட்டார நீர் எல்லை தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டதாக நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 15) நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வில் அவர் கூறினார்.

இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான ஒரே கடல் எல்லை ஒப்பந்தமாக அது நீடிக்கும் என்று கூறிய அவர், 1927ல் கையெழுத்தான ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்ற ஒப்பந்தம், ஜோகூர் வட்டார நீர் ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடல் எல்லையைத் துல்லியமாக நிர்ணயிக்க இரு அரசாங்கங்களும் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்று அவர் கூறினார்.

முந்தைய கடல் வரையறை இன்னும் ஏற்புடையதாக இருப்பதால் சிங்கப்பூர்- ஜோகூர் கடற்பகுதிகளுக்கு இடையிலான எல்லையை மறுவரையறை செய்வது தேவையற்றது என்று தனது அமைச்சு கருதுவதாக முகமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here