மற்றவரின் சைக்கிளை எடுக்கலாமா எனத் தாயார் கண்டித்ததால் கோபம் அடைந்த 14 வயதுச் சிறுவன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். இந்தச் சம்பவம் ஸ்தாப்பாக்கில் நிகழ்ந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் தங்கள் வீடமைப்புப் பகுதியில் வேறொருவரின் சைக்கிளில் என் மகன் எல். குகன்ராஜை (வயது 14) சவாரி செய்ததைப் பார்த்த அவனைக் கண்டித்தேன் என 40 வயது எல்.சாரதா தெரிவித்தார்.
மூன்று நாட்கள் என் மகன் அந்தச் ங்கை்கிளைப் பயன்படுத்தியதால் மற்றவர்களின் சைக்கிளைப் பயன்படுத்தக்கூடாது என நான் அவனைக் கண்டித்தேன். அந்தச் சைக்கிளைத் திருப்பிக்கொடுத்துவிடு என மகனிடம் கூறினேன். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணி அளவில் குகன்ராஜ் வீடு திரும்பியபோது மற்றவர் ங்கை்கிள் நமக்கு எதற்கு என்று என் தாயாரும் அவனைக் கண்டித்தார். அதன்பின் ஒரு கறுப்புப் பையுடன் என் மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் என்று சாரதா தெரிவித்தார்.
4 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் 2ஆவது பிள்ளையான குகன்ராஜ் வீட்டை விட்டு வெளியேறியபோது சிவப்பு நிற டி-சட்டை அணிந்திருந்ததாக ஒரு காவலாளியாக வேலை செய்யும் சாரதா சொன்னார். கடந்த ஜூன் மாதம் முதல் குகன்ராஜ் பள்ளிக்குச் செல்லவில்லை. அடுத்தாண்டு ஒரு சமயப்பள்ளிக்கு அவனை அனுப்பத் திட்டமிட்டிருந்தேன். வீட்டை விட்டு சென்றுவிட்ட குகன்ராஜ் குறித்து நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன். அவன் அடையாளக்கார்டையும் எடுத்துச் செல்லவில்லை. அவனிடம் பணமும் இல்லை என சாரதா கூறினார்.
குகன்ராஜ் காணாமல்போனது குறித்து நேற்று முன்தினம் சாரதா வங்சா மாஜு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குகன்ராஜ் குறித்து தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்புகொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.










