191-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜோனதன் ஆமை; குவியும் வாழ்த்துகள்

செயின்ட் ஹெலேனா தீவில் வசித்து வரும் ஜோனதன் ஆமை தனது 191வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், உலகின் மிகவும் வயதான ஆமை என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அதிகபட்ச வயது வரை வாழக்கூடியவை ஆமைகள் ஆகும். இவற்றின் சராசரி வாழ்நாள் சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடல் ஆமைகள் உணவாகாமல் தப்பித்தால் இந்த 150 ஆண்டுகளை கடப்பது மிகவும் எளிதானதாகும். அதேசமயம் நிலத்தில் வாழும் ஆமைகளில் செச்சல்ஸ் மற்றும் கெலபாகஸ் ஆமைகள் சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை ஆகும். உலகில் இது போன்று வளர்ப்பு ஆமைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், செயின்ட் ஹெலேனா தீவில் வசித்து வரும் ஜோனதன் என்ற ஆமை மிகவும் புகழ்வாய்ந்தது ஆகும்.

உலகின் மிகவும் வயதான உயிரினம் என சாதனை

இந்த ஆமை எப்போது பிறந்தது என்பது தொடர்பான ஆவணங்கள் இல்லை என்றாலும் இந்த ஆமை 1832 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த 1882 ஆம் ஆண்டு செயின்ட் ஹெலேனா தீவின் ஆளுநராக பதவி வகித்த சர் வில்லியம் கிரே வில்சன் என்பவர் மூலமாக ஜோனதன் இந்த தீவிற்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது முதல் இப்போது வரை ஆளுநர் மாளிகையிலேயே ஜோனதன் வசித்து வருகிறது. ஜோனதன் ஆமையின் பிறந்த தேதி சரிவர தெரியாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மூன்றாம் தேதி ஆமையின் பிறந்த தினமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

1886ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஜோனதன் ஆமையின் புகைப்படம்
அந்த வகையில் 191 வது பிறந்த நாளை இன்று ஜோனதன் கொண்டாடியுள்ளது. இதையொட்டி மூன்று நாட்களுக்கு ஜோனதன் ஆமையை பொதுமக்கள் நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் 191 வயது என கணக்கிடப்பட்டாலும் கூட, இந்த ஆமைக்கு 200 வயதிற்கும் மேல் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது நல்ல உடல்நிலையோடு ஜோனதன் ஆமை இருந்து வருவதாகவும், மேலும் சில ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் ஆமை இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாளை முன்னிட்டு 3 நாட்கள் ஜோனதன் ஆமையை பார்வையிட அனுமதி

குறிப்பாக இரண்டு நூற்றாண்டுகள் கடந்து மூன்றாவது நூற்றாண்டிலும் ஜோனதன் ஆமை உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக விலங்கின ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே உலகின் மிகவும் வயதான ஆமை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ள ஜோனதன் தனது 191-வது பிறந்தநாளில் அந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து ஜோனதன் ஆமைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here