செலாயாங்:
ஆகம முறைப்படி முறையான பயிற்சிகளை வழங்கி அர்ச்சகர்களை உருவாக்கி வரும் மலேசிய குருக்கள் சங்கத்திற்கு 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
நேற்று செலாயாங் ஐடிசி மாநாட்டு மண்டபத்தில் மலேசிய குருக்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அமைச்சர் சிவகுமார் உரையாற்றிய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மலேசிய குருக்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் சிவஸ்ரீ பிரகலாதன் குருக்கள் மற்றும் செயலவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குருக்கள் சங்கம் தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாளைய தலைமுறையை உருவாக்கும் மாபெரும் சிந்தனையோடு சங்கத்திற்கு புதிய கட்டிடம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது பாராட்டுக்குரியது. அந்த வகையில் மலேசிய குருக்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த மானியத்தை வழங்குவதாக அவர் சொன்னார்.