பொங்கல் பெருநாள் சமயத்தில் பினாங்கில் நீர் விநியோகத் தடையா?

 

சிம்பாங்க் அம்பாட் – உலகத் தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் திருநாள் காலத்தில், வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பினாங்கு நீர் விநியோகக்கழகம் பினாங்கில் நீர் விநியோகத் தடையை அறிவித்திருப்பது குறித்து பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும் உரிமைக் கட்சியின் அமைப்புத் தலைவருமான பேராசிரியர் ப. இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காலமுறை பராமரிப்பு, பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடுவது பிபிஏ-வின் தரப்பில் முழுமையாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும் நான்கு நாள் தண்ணீர்  தடை சற்று கடுமையானது. இது குறித்து தங்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்று தொழிற்சாலைகள் புகார் கூறியிருக்கின்றன.

ஜனவரி 15ஆம் தேதி தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடவிருக்கும் இந்திய சமூகம், முன்மொழியப்பட்ட தண்ணீர் வெட்டு குறித்து வருத்தத்தில் உள்ளது. இத்தகைய விழாக் காலங்களின்போது தண்ணீர் தடைகளுக்கான தேதிகளை பினாங்கு நீர் விநியோகக் கழகம் நிர்ணயிப்பது நியாயமற்ற ஒன்றாகத் தெரிகிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலான பழைய குழாய்களின் பழுது, பராமரிப்புப் பணிகளுக்கு நான்கு முழு நாட்கள் தேவைப்படாது என்று நான் உணர்ந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிக்கலாகத் தெரிகிறது.

பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் பிபிஏவுக்கும் இடையே தேதிகளை முடிவு செய்வதில் சிறந்த ஆலோசனைகள் நடைபெறவில்லை என்பது தெரிகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டுள்ள காலத்தில் பழுது, பராமரிப்புப் பணிகளுக்கு ஏன் நான்கு நாட்கள் தேவை என்பது புரியவில்லை.

சில மணி நேரம் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டால்கூட பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் பினாங்கு மாநில அரசாங்கம், பயனீட்டாளர்கள் சாதாரண பொதுமக்கள், தொழில்துறையினருடன் அவ்வப்போது ஆலோசனைகளை நடத்துவதற்கு, பிபிஏ-க்கு ஆலோசனை வழங்கும் நிலையில் இருக்க வேண்டும்.

இத்தகைய தடைகளால்  தமிழர்கள் பொங்கல் விழாவைக்  கொண்டாட மிகுந்த அச்சத்தையும் நெருக்கடியான சூழ்நிலையையும்  எதிர்கொள்கின்றனர். பொங்கல் கொண்டாட்டத்தின் அடிப்படையே பால் பொங்குவதும் அரிசியை சமைப்பதும், அதை வேக வைப்பதும் ஆகும். தண்ணீர் இல்லாமல் பொங்கலின் தனித் தன்மையும் பொருளும் இல்லாமல் போகலாம்.

மலேசிய உரிமைக் கட்சி பொங்கலுக்குப் பொது விடுமுறையை முன்வைத்து போராடும் நேரத்தில் இதுபோன்ற குறுக்கீடுகள் வேதனையைத் தருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பினாங்கில் உள்ள தமிழர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் கதி என்ன என்பது குறித்து மாநில அரசாங்கத்திலுள்ள இந்தியத் தலைவர்களிடம் இருந்து எந்தக் கருத்தும் வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஓர் அறிக்கையில் இராமசாமி தெரிவிதுள்ளார்.

கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here