இந்தியாவிலிருந்து சென்ற கப்பல் மீது ஹவுதி தாக்குதல்! உள்ளே புகுந்து உதவிய அமெரிக்கா

டெல் அவிவ்: காசா போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இந்தியாவிலிருந்து சூயஸ் கால்வாயை நோக்கி சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தீவிரம் அடைந்தது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு எதிராக சரக்கு கப்பல்களை கடத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் எது வந்தாலும் அதை கடத்துவோம் என்றும் எச்சரித்திருந்த அவர்கள், சமீபத்தில் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து சூயஸ் கால்வாய் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ‘ஆர்ட்மோர் என்கவுன்டர்’ எனும் எண்ணெய் டேங்கர் கப்பலை நோக்கி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசியுள்ளனர். நல்வாய்ப்பாக இதனை அமெரிக்க போர் கப்பல் முறியடித்திருக்கிறது. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்த ஹவுதிக்கு சொந்தமான விமானம் ஒன்றையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. பாப் எல்-மண்டேப் ஜலசந்தி இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த கப்பல் மங்களூரிலிருந்து சூயஸ் கால்வாய் நோக்கி பயணித்திருக்கிறது. மட்டுமல்லாது கப்பலில் ஆயுதமேந்திய பாதுகாப்பு குழுவினரும் இருந்திருக்கின்றனர். அமெரிக்காவின் உதவியால் கப்பலும், கப்பலில் இருந்தவர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஹவுதி கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் கப்பலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here