சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலைகளில் எந்தவித அறிகுறியும் காட்டாமல் வளரக் கூடியவை. ஆகவே, இவற்றை முன்கூட்டியே கண்டறிவது சிரமம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது கண்களில் 3டி ஸ்கேன் செய்வதன் மூலமாக சிறுநீரக நோய்களை கண்டறிய முடியும் என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. சிறுநீரகத்தின் பாதிக்கும் வரையில் தற்போதைய பரிசோதனை முறைகளில் அதனை கண்டறிய முடியாது என்ற சூழலில், இந்த மேம்பட்ட 3டி பரிசோதனை முறையானது சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நம் கண்களுக்கு பின்னால் உள்ள விழித்திரை (ரெடினா) தான் வெளிச்சத்தை உணர்ந்து, நம் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகிறது. இந்த விழித்துரையை மிகப்பெரிய அளவில் உற்றுநோக்கி படம்பிடித்து பார்த்தால், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொண்டு சிறுநீரக பாதிப்பை துரிதமாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணிய ரத்த ஓட்டம் : நம் உடலில் நுண்ணிய ரத்த நாளங்களைக் கொண்டுள்ள ஒரே உறுப்பு கண் மட்டுமே. இவ்வளவு சிறிய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை கணித்தால், அதை சிறுநீரக பாதிப்பின் எதிரொலியாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒசிடி பரிசோதனை : எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கண் விழித்திரையை 3டி முறையில் பரிசோதிக்க ஆப்டிக்கல் கோஹெரென்ஸ் டோமோகிராஃபி (ஓசிடி) என்னும் பரிசோதனை முறையை பயன்படுத்தினர். ஒளி அலைகளைப் பயன்படுத்தி, கண் விழித்திரையின் குறுக்கு வெட்டுப் படங்களைப் பிடித்து, ஒவ்வொரு லேயராக பார்க்கலாம் என்றும், ஒரு சில நிமிடங்களில் இந்த பரிசோதனை முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு முடிவுகள் : வெவ்வேறு நிலைகளில் சிறுநீரக பாதிப்பை கொண்ட 204 நோயாளிகள் மற்றும் ஆரோக்கியமான 86 தன்னார்வலர்களுக்கு ஓசிடி முறையில் 3டி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு கொண்ட மக்களுக்கு விழித்திரை படலம் மெல்லியதாக மாறியிருப்பது தெரியவந்தது. ஆனால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால், விழித்திரை பாதிப்பு சரியாக மீண்டும் இயல்புநிலை திரும்புவதையும் கண்டறிந்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு விழித்திரை படலம் மீண்டும் அடர்த்தியாக மாறி வருவதை உறுதி செய்தனர்.
யாருக்கெல்லாம் பரிசோதனை தேவை : நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை சிறுநீரக பாதிப்பிற்கான அடிப்படை காரணங்களாக உள்ளன. இந்த பாதிப்புகளைக் கொண்டிருக்கும் மக்கள் இதுபோன்று விழித்திரையை 3டி ஸ்கேன் செய்வதன் மூலமாக சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சைகளின் மூலமாக குணமடையலாம். எனினும், இந்த பரிசோதனை முறையை அமல்படுத்துவதற்கு முன்பாக, இந்த தொழில்நுட்ப உத்தியை இன்னும் கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்றும், நிறைய நோயாளிகளைக் கொண்டு இதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.





















