ஆஸ்திரேலியாவில் தொடர் மழை; மேடான பகுதிக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை

சிட்னி:

ஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஜனவரி 2ஆம் தேதி பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

சாலைகள் துண்டிக்கப்பட்டு, கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை மேடான பகுதிக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குவீன்ஸ்லாந்தின் தென்கிழக்கு வட்டாரம், நியூ சவுத் வேல்சின் வடக்குப் பகுதி ஆகியவற்றில் கடந்த மூன்று நாள்களில் இரண்டு மாதங்களில் பெய்யவேண்டிய அளவு மழை கொட்டித் தீர்த்தது.

குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் ஸ்பிரிங்புரூக் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 514 மில்லிமீட்டர் மழை பெய்தது. இது, வழக்கமாக ஜனவரி மாதம் பெய்யக்கூடிய மழையின் சராசரி அளவைப்போல் இருமடங்குக்கும் அதிகம் என்று கூறப்பட்டது.

வானிலை சீராகும்வரை பொதுமக்கள் சாலைப் பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென மாநிலத் துணை முதல்வர் கேமரன் டிக் வலியுறுத்தியுள்ளார். திடீர் வெள்ளம் குறித்து அவர் எச்சரித்தார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 20க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் இடுப்பளவு நீரில் பணியில் ஈடுபட்டதையும் வெள்ளத்தில் சிக்கிய கார்கள், வீடுகளின் கூரைகள்மேல் சாய்ந்த மரங்கள், வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் போன்றவற்றையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்கள் காட்டுகின்றன.

ஏற்கெனவே கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் இன்னும் மின்தடை நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here