மெய்நிகர் உலகில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரம்; விசாரணையில் தடுமாறும் இங்கிலாந்து போலீசார்

லண்டன்:

மெட்டாவெர்ஸ் உலகில் 16 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருப்பது இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெய்நிகரில் நடந்திருக்கும் குற்ற வழக்கை எப்படி விசாரிப்பது, குற்றவாளிகளை எப்படி பிடிப்பது என்று போலீசார் குழம்பிப் போயுள்ளனர்.

நாம் வாழும் இந்த மெய் உலகத்துக்கு அப்பால், ஒரு மெய்-நிகர் உலகாக உருவாவதே மெட்டாவெர்ஸ். நடப்பிலிருக்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுடன், நமது சூழலை மெய்நிகரில் சிருஷ்டிக்கும் ஆக்மென்டெட் ரியாலிட்டி, அதில் நம்மை நெருக்கமாக உணரச்செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை கலந்ததே மெட்டாவெர்ஸ்.

நடப்பு உலகில் நாம் துய்க்கும் அனைத்து உணர்வுகளையும் மெட்டாவெர்ஸில் முழுதாகப் பெறலாம். பூமியின் எல்லைக்கோடுகளை கடந்து விர்ச்சுவல் நண்பர்களுடன் விளையாடுவது, ஊர் சுற்றுவது, அலுவலகப் பணியை பகிர்ந்து செய்வது என அனைத்தையும் சாத்தியமாக்கலாம். இவற்றுடன் எதிர்மறையாக, நிஜவுலகின் குற்றங்களையும் நிகழ்த்தலாம். அப்படித்தான் இங்கிலாந்தின் 16 வயதுப் பெண் மெட்டாவெர்ஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்கான வழக்கமான உபகரணங்கள் அணிந்து அவர் மெட்டாவெர்ஸில் சஞ்சரித்துள்ளார். அதாவது அப்பெண்ணின் மெய்நிகர் வடிவமான ’அவதார்’ மெட்டாவெர்ஸில் உலவும்போது, அதேபோன்று அவதார் வடிவங்களில் குறுக்கிட்ட அனாமதேய ஆண்கள் 16 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினார்களாம்.

இதனால் அப்பெண்ணுக்கு உடல்ரீதியாக பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்றபோதும், பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்ணுக்கான அனைத்து கொடுமைகளையும் மனரீதியாக அவர் அனுபவித்தாராம். இவற்றின் அடிப்படையில் தன்னை பலாத்காரம் செய்த அவதார்களின் நிஜவுலகு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிர்ந்துபோன போலீசார் மெட்டாவெர்ஸ் உலகில் குற்றவாளிகளை எப்படி கண்டறிவது என்று குழம்பிப்போனார்கள். பின்னர் சட்ட வல்லுநர்கள் முதல் சைபர் முன்னோடிகள் வரை பலரையும் கலந்தனர். அதன் பிறகே, வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசாரை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

16 வயது பெண்ணை மெட்டாவெர்ஸில் தங்கள் அவதார்கள் வாயிலாக பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், நிஜ பலாத்காரத்தை நிகழ்த்தியதற்கு நிகரான தண்டனைகள் அவர்களுக்கு பெற்றுத் தரப்படும் எனவும் இங்கிலாந்து போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கும் அதன் விசாரணையின் பாதையும், மெய்நிகர் உலகின் குற்றங்கள் மற்றும் விசாரணைகளுக்கு முன்னுதாரணமாக அமையப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here