அரிசி, நெல் விதைகளின் விலைகளை மூன்றாம் தரப்பு கட்டுப்படுத்துகிறதா? அமைச்சகம் மறுப்பு

கோலாலம்பூர்:

நாட்டில் அரிசி மற்றும் நெல் விதைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் மூன்றாம் தரப்பு அல்லது மாஃபியா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1994 (சட்டம் 522) மூலம் நாட்டின் அரிசி, நெல் விவசாயம் சார்ந்த தொழில் முறைகளை Kawalselia Padi dan Beras (KPB) என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, அரிசித் தொழிலின் ஆரோக்கியமான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, உரிமம் மற்றும் அமலாக்கத்தின் மூலம் அமைச்சகம் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

“இந்தச் சட்டம், உற்பத்தி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, இறக்குமதி அல்லது ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இடமாற்றங்கள் உட்பட, நெல் மற்றும் அரிசி பரிவர்த்தனைகளுக்கான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை வழங்குவதற்கு KPB இன் இயக்குநர் ஜெனரலுக்கு அதிகாரங்களை வழங்குகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மொத்த அரிசி உரிமம், ஏற்றுமதி உரிமம், இறக்குமதி உரிமம், நெல் ஆலை உரிமம், நெல் கொள்முதல் உரிமம், சில்லறை அரிசி உரிமம் மற்றும் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளுக்கு நெல் விதைகளை விற்பனை செய்வதற்கான சிறப்பு அனுமதிகள் என 39,000 பல்வேறு உரிமங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த அரிசித் தொழிலை ஏகபோகப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் திறன் கொண்ட மூன்றாம் தரப்பு அல்லது மாஃபியா எதுவும் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது என்கிறது அமைச்சு.

இவ்விஷயத்தில் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சட்ட மீறல்கள் இருந்தால், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் KPB புகார் போர்டல் மூலம் https://skpb.kpkm.gov.my/adu அல்லது [email protected] அல்லது KPKM க்கு ஹாட்லைன் 03-88701751/1748/1183 என்ற எண்ணில் புகார்கள் அல்லது தகவல்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here