பணியிடம் பாதுகாப்பாக இல்லை; ஒப்பந்ததாரர்களுக்கு தடை அறிவிப்பு- DOSH

மலாக்கா:

ஜாலான் புக்கிட் காட்டிலில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள சாக்கடையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள திட்ட தள ஒப்பந்ததாரர்களுக்கு மலாக்கா தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) இரண்டு தடை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சிப் பகுதியைச் சுற்றி உறுதியான தடுப்புகளை அமைக்க ஒப்பந்ததாரர்கள் தவறியதாலும், போதிய வெளிச்சத்துடன் உரிய எச்சரிக்கை பலகைகள் அவ்விடத்தில் இல்லாததாலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக DOSH நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மேலும், கட்டுமானப் பணிகள் குறித்து மலாக்கா DOSHக்கு அறிவிக்கவும், கட்டுமான தளத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒரு தள பாதுகாப்பு மேற்பார்வையாளரை நியமிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “தொழிலாளர்கள் அல்லது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளை DOSH தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, மேலும் விபத்துக்கான காரணங்களை அடையாளம் காண கூடுதல் விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 இன் விதிகளின் கீழ் மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட முதலாளி அல்லது ஒப்பந்ததாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஜன.4) காலை 6.30 மணியளவில் குறித்த கட்டுமானப்பகுதியில் நடந்த சம்பவத்தில், 3 மோட்டார் சைக்கிள்கள் 3.2 மீட்டர் ஆழமான குழிக்குள் விழுந்ததில் ஹைகால் இமான் முகமது ஷாருதீன் அப்துல் கயூம், 20, என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சோங் மின் யாங், 57, மற்றும் முகமடி ஜைம் பஹ்ரின், 31 ஆகியோர் காயமடைந்ததாகவும் தென் மலாக்கா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here