கோலாலம்பூர்:
வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரச் சக்தியாக உருவெடுக்க ஆசியான் அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இன்னமும் 25 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
எனவே, தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
விஸ்மா புத்ராவில் நடைபெற்ற 59-வது ஆசியான் தினச் செய்தியாளர் சந்திப்பில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) உரையாற்றிய அவர், “உறுப்பு நாடுகளிடையே பொருட்கள் தங்குத் தடையின்றி சென்று சேர்வதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆசியானுக்குத் தலைமை தாங்கிய மலேசியா, வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய தீர்மானங்களை வெற்றிகரமாக முன்வைத்தது,” எனக் குறிப்பிட்டார்.
தற்போது ஆசியானுக்குத் தலைமை ஏற்றுள்ள பிலிப்பைன்ஸ், மலேசியாவின் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களையும் ‘கோலாலம்பூர் பிரகடனத்தையும்’ தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
ஆசியான் தொடங்கப்பட்டு 59 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அண்மையில் திமோர் லெஸ்டே இதன் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவை அமைதியான மண்டலமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், கூட்டுப் பொருளாதாரத்தில் வலிமைமிக்க ஓர் அமைப்பாக மாறுவதிலும் ஆசியான் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது.
‘ஆசியான் சமுதாயத் தொலைநோக்கு 2045’ திட்டத்திற்கான நிரந்தர வழிகாட்டும் பொறுப்பு மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசியானின் முதன்மை அடித்தளமான பிராந்திய வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த மலேசியா தொடர்ந்து பாடுபடும் என்று அமைச்சர் முஹமட் ஹசான் உறுதியளித்தார்.
























