3 மணி நேரத்தில் நால்வருக்குக் கத்திக்குத்து, ஆடவர் கைது

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஜனவரி 6ஆம் தேதி இரவு நடந்த தொடர் கத்திக்குத்துச் சம்பவங்கள் தொடர்பில் 31 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி காலை 1.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

மூன்று வெவ்வேறு சம்பவங்களில் அந்த ஆடவர் நால்வரைக் கத்தியால் குத்தியதாகக் காவல்துறை கூறியது. ஜனவரி 6ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவுக்குப்பின் அரை மணி நேரம் வரை நடந்த இச்சம்பவங்களில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இவை பயங்கரவாதத் தொடர்புடைய சம்பவங்கள் அல்ல என்று நம்புவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட நால்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 24 வயது ஆடவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறப்பட்டது.

31 வயதுப் பெண் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றொரு 31 வயது ஆடவருக்குக் கையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவரான வேறோர் ஆடவருக்குக் காலில் காயமேற்பட்டுள்ளது. அந்த 31 வயது ஆடவருக்கு உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 6ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் நடந்த மற்றொரு கத்திக்குத்துச் சம்பவத்துக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருவதாகக் காவல்துறை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here