ஜித்ரா:
ஒன்பது மாத கர்ப்பிணியான பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சென்ற வாகனத்தில் 10.2 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் நடந்த சோதனையில் குறித்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரோட்ஸி அபு ஹாசன் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 35 வயதுடைய கணவன் மற்றும் மனைவி என்றும், அவர்கள் பெர்லிஸில் இருந்து வரும்போது, இரவு 11.50 மணியளவில் போலீஸ் ரோந்துக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
“அந்தப் பிக்-அப் டிரக்கில் சோதனை நடத்தியதில், 10.28 கிலோ எடையுள்ள கஞ்சா என நம்பப்படும் 10 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவை பின் பக்க பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ,” என்று அவர் இன்று புதன்கிழமை (ஜன. 10) நடந்த ஒரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“வடமாநிலங்களுக்கு விநியோகம் செய்வதற்காக அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா 3,200 போதைப்பித்தர்களால் பயன்படுத்த முடியும்” என்றார் அவர்.
விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இரவில் புக்கிட் காயு ஈத்தாம் எல்லை வழியாக தாய்லாந்துக்கு அடிக்கடி பயணம் செய்ததாக நம்பப்படுகிறது என்று ரோட்ஸி கூறினார்.
சந்தேகத்திற்குரிய இருவரின் சிறுநீர் மாதிரிகள் கஞ்சா பாவனைக்கு சாதகமான பதிலை பெற்றதாகவும், ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக தம்பதியினர் ஜனவரி 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்ட ஆணுக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் இதற்கு முன் எட்டு வழக்குகள் உள்ளன, அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு மூன்று வழக்குகள் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.









