பொங்கல் திருநாள் என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
அந்த வகையில் மலேசிய இந்து சங்கம் பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்து சங்கத்தின் அறிக்கைப்படி காலை 7 மணி முதல் 8.30 மணி வரையிலும் மேலும் காலை 10.25 முதல் 11.52 வரையிலும் அல்லது நண்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் என இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சங்கபூஷண் தங்க கணேசன் தெரிவித்தார்.
இந்த விழா நம் நாட்டில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.




















