(எம்.எஸ்.மணியம்)
பந்திங், ஜன. 18-
இந்தப் புத்தாண்டில் புதிய சாதனைகளை படைக்க பிட்மா வெட்ரன் குழுவினர் இலக்கு கொண்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ம.முருகன் தெரிவித்துள்ளார். அண்மையில் பிட்மா வெட்ரன் சங்கத்தின் 4 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு பேசினார்.
கடந்த ஆண்டு தாய்லாந்து மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒன்பது தங்கப் பதக்கங்களையும், சிங்கப்பூர், ஜோகூர் மாஸ்டர் தடகளப் போட்டியில் பத்து தங்கப்பதக்கங்களையும் வென்று பிட்மா வெட்ரன் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாண்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறவிருக்கும் பல போட்டிகளின் தங்களது குழுவினர் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதில் கடந்த ஆண்டை விட கூடுதல் பதக்கங்களை வெல்ல இலக்கு கொண்டுள்ளது. இதற்கான பயிற்சிகளை தமது விளையாட்டாளர்கள் ஷா ஆலம் மாட்சுஷுத்தா விளையாட்டரங்கில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 8.00 மணி முதல் காலை 9.30 மணி வரை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
இதனிடையே சங்கத்தின் 4 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் காலியாக இருந்த சில பதவிகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் அதன் படி சங்கத்தின் பொருளாளராக நித்தியானந்தன் கிருஷ்ணன் குட்டி, நிர்வாக குழு உறுப்பினராக அச்சுதன் பாலகிருஷ்ணன், உட்கக்காய்வாளர்களாக ஜெடிடா, நேதாஜி ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுநாள் வரை சங்கத்தின் பொருளாளாராக பொறுப்பு வகித்து பதவி விலகிச் செல்லும் விமலசிங்கம் சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றியவர். மேலும் சிங்கப்பூர், ஜோகூர் மாஸ்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதோடு பதவி விலகிச் செல்லும் கே.சுந்தர்ராஜூ, என்.குணசேகரன், சி.செல்வராஜா ஆகிய மூவரும் மேற்கண்ட போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஜி.சுரேஷ்குமார், இளங்கோவன் சீதாராம், கே.மகாலிங்கம் ஆகியயோருக்கும் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.









