ஷா ஆலாம்:
புக்கிட் சுபாங்கில் உள்ள பிளாக் 15, மெலாத்தி அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையில், கொலை வழக்கில் சந்தேக நபரான இந்தோனேசிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் 28 சென்டிமீட்டர் நீளமான கத்தியால் போலீசாரை தாக்கியதாகவும், அவரிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றபோது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டது என்றுசிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.
“நேற்று மாலை 5.50 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்ற போலீசார், சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டின் கதவை பல முறை தட்டியும், அவர் அதனை திறக்கவில்லை, பின்னர் ரெய்டு குழுவினர் உள்ளே நுழைந்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தினர்.
அப்போது ” திடீரென 20 வயதுடைய சந்தேக நபர் கத்தியுடன் போலீஸ் அதிகாரி ஒருவரை நோக்கி ஓடி வந்தார், அதனால் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மேலும் சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் மீட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக உசேன் கூறினார்.
முன்னதாக, பெட்டாலிங் ஜெயாவின் டேசா மெந்தாரி, பிளாக் 5 இன் ஐந்தாவது மாடியில் உள்ள லிஃப்ட் அருகேயுள்ள படிக்கட்டுகளில் 19 வயதான இந்தோனேசியப் பெண் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.