மனைவி கத்தியால் குத்தியதில் கணவர் படுகாயம்

கூச்சிங்:

கோத்தா சமரஹான், ஜாலான் டத்தோ முகமட் மூசாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தகராறில், தனது கணவரைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 31 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை 6:50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 35 வயதான அந்த கணவர் வயிற்றில் பலத்த காயமடைந்துள்ளதாகக் கோத்தா சமரஹான் மாவட்டத் துணைப் போலீஸ் தலைவர் டெபுட்டி சூப்பரின்டென்டென்ட் பெர்ரி வில்லியம் தெரிவித்தார். மனைவியால் குத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் போலீசாருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது.

“முதற்கட்ட விசாரணையில், இந்தத் தம்பதியருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆவதும், மூன்று பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இச்சம்பவத்திற்கு முன்னதாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பொறாமை காரணமாக உருவானது என நம்பப்படுகிறது.”

சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட கணவர் தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால், மனைவியின் வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் (Helmet) மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் தலையில் காயமடைந்த மனைவி, கணவர் தன்னைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தபோது, அங்கிருந்த கத்தியை எடுத்து அவரைப் பலமாகக் குத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவத்தின் போது, கணவர் தனது தாயாருடன் வாட்ஸ்அப் (WhatsApp) வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்ததால், அவரது தாயார் இச்சம்பவத்தை நேரடியாகக் கண்டுள்ளார்.

தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன் பாதுகாப்பிற்காகவே (Self-defence) தான் அவ்வாறு செய்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், காயமடைந்த தனது கணவரை அவரே உடனடியாகக் கோத்தா சமரஹானில் உள்ள சரவாக் இதய மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

வயிற்றுப் பகுதியில் பலத்த கத்தியடி பட்டதால் கணவரின் குடலின் ஒரு பகுதி வெளியே வந்த நிலையில், அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மற்ற உள் உறுப்புகளுக்குப் பெரிய பாதிப்புகள் இன்றி அவர் மருத்துவக் கண்காணிப்பில் குணமடைந்து வருகிறார்.

இச்சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு கடுமையான காயம் விளைவித்ததற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 326-இன் கீழ், அந்தப் பெண் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here