சாக்லேட் கொடுத்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது

சென்னையில் சாக்லேட் கொடுத்து பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த வாலிபரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 7 வயதுடைய பள்ளி மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “தனது 7 வயது மகள் தினமும் வீட்டுக்கு வெளியே அவரது சக நண்பர்களுடன் விளையாட செல்வது வழக்கம். நேற்று முன்தினம் விளையாட சென்ற மகள் அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்தார். இது குறித்து அவரிடம் விசாரித்த போது, 4ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் சிலரை அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் சாக்லேட் தருவதாக கூறி அழைத்து சென்றதாகவும், அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாக்லேட் கொடுத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தன்னிடம் கூறியதாகவும்” அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் பல மாதங்களாக சாக்லேட் தருவதாக கூறி 7வயது முதல் 10 வயது வரை உள்ள மூன்று சிறுமிகளை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். மேலும் திருவான்மியூர் கலாஷேத்ரா வழியாக அந்த நபர் நடந்து சென்றதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியதன் பேரில் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து போலீஸார் அடையாறு மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான்(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் யோவான் தாய், தந்தையை இழந்து தனிமையில் வாழ்ந்து வருவதும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் கைதான யோவான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளான். இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயத்தில் வெளியே சொல்லாமல் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் யோவானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here