பிரியாவுக்கு தோக்கோ விருது

 கே. ஆர். மூர்த்தி

அலோர்ஸ்டார், பிப்.3-

அலோர்ஸ்டார் பாரதி தமிழ்ப்பள்ளியில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ள 13 மாணவர்களுள் மாணவி பிரியா கலைமாறனுக்கு தோக்கோ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டதாக கோத்தாஸ்டார் மாவட்ட கராத்தே டோ கழகத்தின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான மாஸ்டர் சுரேஸ் மாரியப்பன் தெரிவித்தார்.

கடந்த 31.1.2024 பாரதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் எம். அழகப்பன் தலைமையில் இணைப்பாட நடவடிக்கையில் இந்த 13 மாணவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

அதில் ஐந்தாம் ஆண்டில் படித்து வரும் மாணவி பிரியா கலைமாறனுக்கு  தோக்கோ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்ட போது மாணவிக்குப் பாராட்டுகள் குவிந்தன. இம்மாணவி கடந்த நான்கு ஆண்டுகளாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு பாரதி தமிழ்ப்பள்ளி நடத்தப்படும் கராத்தே பயிற்சியிலும்  அலோர்ஸ்டாரில் அமைந்துள்ள் கெடா இந்தியர் சங்க கட்டடத்திலும் பயிற்சி பெற்று வருகின்றார்.

இந்தப் பயிற்சியில் மூலம் இம்மாநிலத்தில் கோத்தாஸ்டார், இதர மாவட்டங்களில் மாவட்ட நிலையில் நடத்தப்படும் கராத்தே போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றனர்.

மாநில, தேசிய நிலையிலும் கராத்தே போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றதோடு மட்டுமல்லாமல் பாரதி தமிழ்ப்பள்ளியின் பெயரைத் தேசிய அளவில் பதித்துள்ளார். இம்மாணவி கடந்தாண்டு தேசிய அளவில் ஜோகூர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மடானி நிகழ்ச்சியில்  கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு தோக்கோ மடானி விருதும் வழங்கப்பட்டது. கராத்தேயைத் தவிர்த்து பள்ளியில் நடத்தப்படும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இதைக் கருத்தில் கொண்டு இணைப்பாட நடவடிக்கையில் கீழ் பாரதி தமிழ்ப்பள்ளி அளவில் இம்மாணவிக்கு தோக்கோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளையில் இம்மாணவியின் சாதனைக்குத் துணையாக இருந்து கராத்தே பயிற்சியில் ஈடுபடுத்தி இன்று தேசிய அளவில் தடம்பதிக்க வைத்த கோத்தாஸ்டார் மாவட்ட கராத்தே டோ கழகத்தின் தலைவர்  மாஸ்டர் சுரேஸ் மாரியப்பனுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. அழகப்பன்  அவருக்குச் சிறப்புச் செய்தார். இந்தப் பாராட்டு நிகழ்ச்சியில் கோத்தாஸ்டார் மாவட்ட கராத்தே டோ கழகத்தின் பயிற்றுநர் திருமதி கோ. லலிதா அம்பிகை, பயிற்றுநர் எஸ். காயத்திரி,  மாணவியின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here