‘என்னை வண்டு என்று கேலி செய்தவர்களை மன்னித்துவிட்டேன்’; முகத்தில் பெரிய பிறவிக்குறி கொண்ட சிறுமி

ஜோகூர் :

முகத்தில் பெரிய கருப்பு நிறத்திலான பிறவிக்குறியுடன் பிறந்தவர் 11 வயது நூரனிசா உமாய்ரா முகமட் இசா.

ஜோகூரைச் சேர்ந்த இவர், பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும், தன் மனதைப் புண்படுத்தியோர் மீது தான் வெறுப்பு கொள்ளவில்லை என்றார் அவர்.

கடும் சோதனைக்கு ஆளாகும் தன் மகளைப் பற்றி அவரின் தாயார் டிக்டாக் தளத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து, பலருக்கும் அந்தச் சிறுமியைப் பற்றித் தெரியவந்தது.

சிறுமியின் நெற்றி, கண்ணிமைகள், மூக்கு, கன்னங்கள் ஆகியவற்றை அவரின் பிறவிக்குறி மறைத்திருப்பதை அந்த டிக்டாக் பதிவுகளில் காண முடிகிறது.

“என் பிறவிக்குறியால் மற்றவர்கள் என்னைக் கேலி செய்வார்கள். என்னை ‘வண்டு’ என்பார்கள். ஆனாலும் பரவாயில்லை, அவர்களை நான் மன்னித்துவிடுவேன்,” என்று கூறிய அவர், தனது பிறவிக்குறி தனக்குத் தனித்தன்மை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுமியின் தாயார் கருவுற்ற காலத்தில் ஏதேனும் ஒரு குரங்கை அவரின் கணவர் கொன்றாரா, அல்லது கிரகணத்தைப் பார்த்த பிறகு அவர் குளித்தாரா என்றெல்லாம் மூடநம்பிக்கையுடைய சிலர் தன்னிடம் கேட்டுள்ளதாக அந்த சிறுமியின் தாயார் கூறினார்.

இருப்பினும் தன் மகளின் எதிர்காலம் கருதி, அந்தப் பிறவிக்குறியை அகற்றச் சிறுமியின் தாயார் அவரை அறுவை சிகிச்சைக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளார்.

இதுவரை, சிறுமி நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், தன் மகள் துணிச்சல்மிக்க மற்றும் பொறுமையான ஒரு பிள்ளை என்று அந்தத் தாயார் பெருமையுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here