டத்தோஸ்ரீ சரவணன்  சுழற்கிண்ணத்தை வென்றது  ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி

 

ராமேஸ்வரி ராஜா

தாப்பா, பிப். 6-

கம்போங் பகாங் இந்திய சமூக பொழுதுபோக்கு மன்றம் இங்குள்ள தாப்பா தமிழ்ப்பள்ளி மைதானத்தில் பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான  டத்தோஸ்ரீ எம். சரவணன்சுழற்கிண்ணம் ஐவர் கால்பந்து போட்டியை நடத்தியது. அதில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நிலையில் வெற்றிபெற்றனர்.

தாப்பா தமிழ்ப்பள்ளியின் ஒத்துழைப்புடனும், சன்குயிக் நிறுவனத்தின் இணை ஆதரவுடனும் இப்போட்டி நடத்தப்பட்டது. 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இப்போட்டியில் மாநிலத்திலுள்ள 17 தமிழ்ப்பள்ளிகள் பங்கெடுத்த வேளையில், அதிலிருந்து 20 குழுக்கள் இறுதிப்போட்டியில்  கலந்துகொண்டன என கம்போங் பகாங் இந்திய சமூக பொழுதுபோக்கு மன்றத்தின் தலைவர் ப. புவினேஸ்வரன் தெரிவித்தார்.

மன்றம் ஆரம்பித்து இந்த 10 ஆண்டுகளில்  17, 18, 21 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளிலும் பொது கால்பந்து போட்டிகளையும்  17 தடவை நடத்தியுள்ளோம். 12 வயதிற்கு உட்பட்ட ஐவர் கிண்ணத்தை இரண்டாவது முறையாக நடத்தியிருக்கிறோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆண்டுக்கான போட்டியை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சார்பாக அவரது சிறப்பு அதிகாரி ஹாஜி சப்ரி தொடக்கி வைத்தார் என மக்கள் ஓசைக்கு வழங்கிய தகவலில் அவர் குறிப்பிட்டார்.முதல் நிலையில் வெற்றிபெற்ற ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி 1,000 ரிங்கிட் ரொக்கப் பணத்துடன் சுழற்கிண்ணத்தையும் பதக்கத்தையும் பரிசாக வென்றது.

இரண்டாம் நிலையில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி  700 ரிங்கிட்டுடன் பதக்கத்தையும் மூன்றாம் நிலையில் பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி 400 ரிங்கிட்டுடன் பதக்கத்தையும் நான்காம் நிலையில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி 300 ரிங்கிட் ரொக்கம் பதக்கத்தையும் வென்று தத்தம் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்தன. தாப்பா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கே. குமுதா, பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் மு. நேசராஜன் ஆகியோரும் போட்டி விழாவில் கலந்து சிறப்பித்த வேளையில் பெற்றோரும் மாணவர்களும் திரளாக வருகைபுரிந்திருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here