மலாக்கா:
68 ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில் நாட்டின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ், மலாயா கூட்டமைப்புக்கான சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார்.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வினை நினைவு கூறும் முகமாக நேற்றிரவு பண்டார் ஹிலிரில் மெர்டேக்கா கோஷம் வானைப்பிழந்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிலழ்வில்,1951 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட M4442 என்ற பதிவு எண் கொண்ட Nash Rambler Custom Convertible காருடன் 600 மீட்டர் தூர ஊர்வலம் ஸ்டாதுஸ் வளாகத்தில் இருந்து தொடங்கி சுதந்திர நினைவுச் சதுக்கத்தை நோக்கிச் சென்றது.
சுதந்திர சதுக்கத்தின் பிரதான மேடைக்கு அவர் வந்தவுடன், துங்கு அப்துல் ரஹ்மான் வேடத்தில் பிரதமர் அன்வார் இருந்தார்
அதே போன்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் துன் சம்பந்தன் போன்று உடை அணிந்து இருந்தார்.
அப்போது அவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்.
சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், துன் டான் செங் லாக் பாத்திரத்தில் நடித்தார்.
துங்கு அப்துல் ரஹ்மான் வேடத்தில் இருந்த அன்வர், மலாயா கூட்டமைப்பு சுதந்திரப் பிரகடனத்தின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சுதந்திரப் பிரகடனத்தை வாசிக்கும்போது, மூன்று முறை “மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!” என கோஷமிட்டார்.
இந்த நிகழ்வில் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர். அத்தோடு இந்த ஆண்டு முதல் பிப்ரவரி 20ஆம் தேதியை மலாக்கா மாநிலம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.





















