செங்கடலில் ஆபத்தான உரங்களை கொண்டு சென்ற கப்பலை அப்படியே விட்டு சென்ற சிப்பந்திகள்.. என்ன நடந்தது?

ஜெருசலேம்: ஆபத்தான ரசாயன உரங்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, செங்கடலில் கப்பலை விட்டுவிட்டு சிப்பந்திகள் சென்றனர். தற்போது கப்பல் பாதுகாப்பாக நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிப்பந்திகளும் பத்திரமாக உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போரை நிறுத்த போவது இல்லை என்று இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போர் 4 மாதங்களாக நீடித்து வருகிறது.

காசாவிற்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான கப்பல்கள் சென்றால் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏமன் வளைகுடாவில் ஆதிகக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகிறது.

செங்கடலில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று பெலீசு நாட்டு கொடியுடன் செங்கடலில் வந்து கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவசர அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் கூட்டு போர்க்கப்பல் ஒன்றும் வணிக கப்பல் ஒன்றும் அங்கு சென்றன. ஆனால், தாக்குதலுக்கு உள்ளான பெலீசு நாட்டு கப்பலான ரூபிமர் அங்கு கைவிடப்பட்ட நிலையில் நின்றுள்ளது. கப்பலின் சிப்பந்திகள் அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றுவிட்டனர். கப்பலில் ஆபத்தான ரசாயன உரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஏடன் வளைகுடாவில் உள்ள பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் கப்பல் நின்றதாகவும் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், தற்போது கப்பல் பாதுகாப்பாக நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிப்பந்திகளும் பத்திரமாக உள்ளதாக இங்கிலாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடலில் கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கப்பலை சிப்பந்திகள் கைவிட்டு செல்வது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், பல கப்பல் நிறுவனங்கள் செங்கடல் பாதையை தவிர்த்து மாற்று பாதையில் செல்கின்றன. இதனால் கால விரயமும் செலவும் அதிகரித்துள்ளது. சர்வதேச கடல் வர்த்தகத்தில் 12 சதவிகிதம் செங்கடல் வழியாகவே நடப்பதால் அங்கு நீடிக்கும் பதற்றமான சூழல் கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here