சீனாவின் நன்ஜிங் நகரக் குடியிருப்பில் தீ; 15 பேர் பலி

பெய்ஜிங்:

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள நன்ஜிங் நகரக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் மாண்டனர். மேலும் 44 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (பிப்ரவரி 23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டடத்தின் முதல் தளத்தில், மின்சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலை 6 மணிக்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர். இருப்பினும் தேடல், மீட்புப் பணிகள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நிறைவுபெற்றன.

தீச்சம்பவத்தில் காயமடைந்த 44 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஒருவர் மோசமான காயங்களால் அவதியுறுவதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த நன்ஜிங் நகர மேயர் சென் சிசாங், அவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here