உணவகத்தில் குடிபோதையில் தகராறு ; ஆடவர் கைது

உலு சிலாங்கூர்:

புக்கிட் புருந்தோங்கில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தும்போது குடிபோதையில் வாடிக்கையாளருக்கு இடையூறு விளைவித்ததற்காக கடையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், தொழிலாளர்களுடன் சண்டையிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று மாலை 4 மணியளவில் நடந்த சம்பவத்தில் 42 வயதுடைய சந்தேக நபர் கத்தியை எடுத்து, வளாகத்தில் இருந்த சில உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளார் என்றும், இந்த சம்பவத்தில் ஒரு உள்ளூர்காரரும் உணவகத்தின் ஆறு ஊழியர்களும் சம்பந்தப்பட்டடுள்ளனர் என்று, உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் ஃபைசல் தஹ்ரிம் கூறினார்.

“சந்தேக நபர் குடிபோதையில் உணவகத்திற்குள் நுழைந்து வாடிக்கையாளர்களைத் துன்புறுத்தத் தொடங்குவதை காசாளரும் ஊழியர்களில் ஒருவரும் முதலில் கவனித்து, உணவகத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் சந்தேகநபர் மீண்டும் உணவகத்திற்குள் வந்து வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும்” கூறப்பட்டது.

பின்னர், சந்தேக நபர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் இன்று தொடர்புகொண்ட போது தெரிவித்தார்.

இந்த சண்டையின் விளைவாக சந்தேக நபர் ஆள்காட்டி விரல், முழங்கை மற்றும் புருவத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும், சந்தேக நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அவருக்கு ஆறு முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார் .

“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 506/427 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 323 இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் சொன்னார்.

முன்னதாக, இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஆண்கள் குழு சண்டையிடும் இரண்டு வீடியோக்கள் நேற்று முதல் சமூக ஊடக தளமான X இல் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here