தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது; வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – வானதி சீனிவாசன் கேள்வி

தமிழக அரசு நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக ஆளுங்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கு மத்திய அரசும் மறுப்பு தெரிவித்து ருகிறது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர். நிதி கமிஷன் என்ன வருவாய் அளவு வைத்திருக்கின்றனர், குறிப்பிட்ட வருவாயில் மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு என அளவீடு உள்ளது. தமிழகத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாயில் எவ்வளவு வழங்கப்படுகிறது, அதை முறையாக வழங்கி வருகின்றனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நேரடியாக செயல்படுத்துகின்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விவசாயிகளுக்கு, பெண்களுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை, மத்திய அரசு, மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா?. இவர்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துகிறது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here