ஃபேஸ்புக் போலவே இனி வாட்ஸ்ஆப் புரொஃபைல் படங்களுக்கும் பாதுகாப்பு

தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மேத்தா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக தொடர்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார் மத்தியில் இது தொடர்பான பாதுகாப்பின்மையும் நிலவி வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது பயனர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும், வருமானத்தை பாதிக்கும் என்ற அச்சத்தால் சமூக ஊடக நிறுவனங்கள் வாளாவிருக்கின்றன.

இதற்காக அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் என சமூக ஊடகங்கள் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளன. ஆனபோதும் அவை தங்களது பயனர் தனியுரிமை குறித்தான அக்கறையில் முன்னேறவில்லை. எனினும் சமூக ஊடகங்கள் மத்தியிலான போட்டி மற்றும் சந்தையில் தம்மை நிலை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றுக்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு.

அந்த வரிசையில் வாட்ஸ் ஆப் சமூக ஊடகத்தில் ஒருவரது புரொஃபைல் படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இனி தடை செய்யப்படும். ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இரண்டுமே மேத்தா நிறுவனத்தின் தளங்கள் என்ற போதும், வாட்ஸ் ஆப் செயலில் இந்த வசதி தாமதமாகவே அறிமுகமாகிறது.

இதன்படி பயனரின் புரொஃபைல் படத்தை அவர் விரும்பியபடி, மற்றவர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இயலாது போகும். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சிப்பவருக்கு ஃபேஸ்புக் பாணியில் வாட்ஸ் ஆப் உணர்த்தவும் செய்யும்.

இதன் மூலம் வாட்ஸ் ஆப் ஊடகத்தில் சுயவிவரப் படங்களை வைத்துக்கொள்ள விரும்புவோர் இனி சுதந்திரமாக அவற்றை மேற்கொள்ளலாம். பீட்டா வெர்ஷனில் பரிசோதிக்கப்படும் இந்த நடைமுறை விரைவில் அனைத்து பயனருக்கும் அமலாகும்.

அனுப்பிய செய்திகளை அழிப்பது, திருத்துவது, பார்த்தவுடன் மறையச் செய்வது உள்ளிட்டவற்றின் வரிசையில், இந்த புதிய மாற்றம் விரைவில் அமலாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here