கோலாலம்பூர்:
நாட்டின் அரசியல் நிலைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு கட்சியினரின் கோரிக்கையையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.
அனைத்து தரப்பினரும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, மக்களினால் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தை மதிக்க வேண்டும் என்று, இன்று நடந்த 15 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் கூட்டத்தின் தொடக்கத்தில் தனது தொடக்க அரச உரையில் அவர் கூறினார்.
யாதேனும் கட்சிகள் அரசியலில் விளையாட விரும்பினால், அவர்கள் வரவிருக்கும் தேர்தல் காலம் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எனது முன்னுரிமை எப்போதும் 33 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களின் நல்வாழ்வு என்பதை அனைத்து கட்சிகளும் அறிந்திருக்கின்றன. ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களுக்கோ அல்லது அவர்களின் அரசியல் கட்சிகளுக்கோ முன்னுரிமை அளிப்பதை விட, மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன், “என்று பேரரசர் கூறினார்.
























