ஜோகூர்:
கடந்த ஆண்டு முழுவதுக்கும் ஜோகூர் மாநிலத்துக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்களாவார்.

இந்நிலையில், இவ்வாண்டு 20 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க ஜோகூர் இலக்கு வைத்துள்ளதாக ஜோகூர் சுற்றுலாத்துறை இயக்குநர் ஷஹ்ரில் நிஸாம் அப்துல் ரஹிம் கூறினார்.
மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறையை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து ஜோகூர் சுற்றுலாத்துறை அணுக்கமாகப் பணியாற்ற இருப்பதாகவும், அதற்கான திட்டங்கள் குறித்த அனைத்து மேம்பாடுகளும் ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸியிடம் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஜோகூரில் மேம்படுத்தப்பட்டுவரும் சுற்றுப்பயணத்துறை நிலையங்களில் ஜோகூர் விலங்கியல் பூங்காவும் தேசிய பூங்காவும் அடங்கும் என்று ஷஹ்ரில் நிஸாம் குறிப்பிட்டார்.
சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஜோகூர் சட்டமன்றத்தில் சுற்றுலாத்துறையை ஜோகூர் மந்திரி பெசார் தனக்கு கீழ் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.



















