இந்திய இருமல் மருந்தால் ஏற்பட்ட 68 மரணங்கள்; 21 பேருக்குச் சிறை

ந்தியாவில் தயாரான தரக்குறைவான இருமல் மருந்தினை உண்டதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்ததில், இந்தியர் ஒருவர் உட்பட 21 பேருக்கு உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் தேசமும் ஒன்று. வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு என்றே இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட மருந்துகளின் தரக்குறைவு, கலப்படம், விஷத்தன்மை ஆகியவை தாமதமாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டன.

ஆனால் அதற்கு முன்னதாக, அந்த இருமல் மருந்தினை உட்கொண்ட குழந்தைகள் அநியாயமாக பலியானார்கள். இப்படி உஸ்பெகிஸ்தான் தேசத்தில் 2022 – 2023 இடையில் குறைந்தது 86 குழந்தைகள் விஷத் தன்மை வாய்ந்த இருமல் மருந்து உட்கொண்டதில் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 68 பேர் பின்னர் இறந்தனர்.

இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டாக்-1 மேக்ஸ் என்ற பெயரிடப்பட்ட மருந்தினை, உஸ்பெகிஸ்தானில் இறக்குமதி செய்த நிறுவனத்தின் இயக்குனரான ராகவேந்திர பிரதாப் சிங் என்பவர் குற்றச்சாட்டுக்கு ஆளானார். வழக்கு விசாரணையின் இறுதியில், இந்திய குடிமகனான இவர் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனைக்கு ஆளானார். இவர் உட்பட 21 பேருக்கு இதே போன்று சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சர்ச்சைக்கு ஆளான இருமல் மருந்தின் மாதிரிகளை பரிசோதித்ததில், அவற்றில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் உள்ளிட்ட தொழிற்சாலை நச்சுப் பொருட்கள் கணிசமாக இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இருமல் மருந்துகளை தயாரித்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை இந்தியா ரத்து செய்தது. இதே போன்ற விஷம் தோய்ந்த இந்திய இருமல் மருந்துகளை உட்கொண்டதில் காம்பியாவில் 70 குழந்தைகளும், இந்தோனேசியாவில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத எண்ணிக்கையிலான குழந்தைகளும் இறந்தது இதே காலகட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here