புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த நடிகர் சிவகுமாருக்கு சிரித்த முகத்தோடு முதியவர் ஒருவர் சால்வையை போர்த்த வைத்திருந்ததைப் பார்த்து, கோபமாக அவர் கையிலிருந்து சால்வையைப் பறித்து, தூக்கி வீசி எறிந்து சர்சையைக் கிளப்பியிருக்கிறார் சிவகுமார்.
இதற்கு முன்பாக செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்ஃபோனைத் தட்டி விட்டார் சிவகுமார். அந்தச் சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி, கடும் கண்டனங்களை சந்தித்த நிலையில், ரசிகருக்கு நடிகர் சிவகுமார் புதிய செல்போன் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.
திரையுலக மார்கண்டேயன் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர் சிவக்குமார், இலக்கிய நிகழ்வுகள், சமூக நிகழ்ச்சிகள் என அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆனால், அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அது இணையத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பும். அப்படித்தான் முன்பொரு முறை ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையானது. சிவகுமாருக்கு எதிராகவும் பலர் கருத்துத் தெரிவித்தனர். பின்பு, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி தந்தார்.
அதுமாதிரியான இன்னொரு புதிய சர்ச்சையில்தான் தற்போது சிவகுமார் சிக்கியுள்ளார். காரைக்குடியில் புத்தக திருவிழாவில் நடிகர் சிவகுமார் பங்கேற்ற போது சிவகுமாருக்கு வயதான ரசிகர் ஒருவர் சிரித்த முகத்தோடு சால்வை அணிய முயற்சித்தார். அதைப் பார்த்து கோபமடைந்த சிவகுமார், அவரிடமிருந்து சால்வையை பறித்து, ஆவேசமாக அதைத் தூக்கி வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே செல்போனைத் தட்டி விட்டது கடும் கண்டத்திற்கு உள்ளானது. அந்த விஷயமே இன்னும் பலரும் மறக்காத நிலையில் சிவகுமார் இப்படி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பலருக்கும் கம்பராமாயணத்தையும், யோகா செய்வதன் பலன்களையும், கோபத்தை விட்டொழியுங்கள் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நடிகர் சிவகுமார் இப்படி கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கிறாரே எனப் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.




















