குட்இயர் டயர் நிறுவனம் தனது ஷா ஆலம் தொழிற்சாலையை ஜூன் மாதம் முதல் மூடவுள்ளது

பெட்டாலிங் ஜெயா: முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான குட்இயர் ஜூன் 30 முதல் ஷா ஆலமில் உள்ள தனது தொழிற்சாலையை மூடவுள்ளது. இதனால் அதன் 550 பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். குட்இயர் ஆசியா பசிபிக் தலைவர் நதானியேல் மதராங் கூறுகையில், இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “குட்இயர் ஃபார்வர்ட்” உருமாற்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை. எங்கள் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்ட கால நலன்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியதாக  உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது. இந்த முன்முயற்சியின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் குட்இயர் ஆண்டுச் செலவுகளை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM4.73 பில்லியன்) குறைத்து, போட்டித்தன்மையுடன் இருக்கவும், தொழில்துறையின் தலைவராக தனது நிலையை வலுப்படுத்தவும் நம்புகிறது.

ஷா ஆலமில் உள்ள உற்பத்தி ஆலை ஜூன் 30 முதல் மூடப்படும் என்று மதராங் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் மூடல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றார் அவர். குட்இயர் மலேசியா தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் தைவானில் உள்ள அதன் தொழிற்சாலைகளில் இருந்து டயர்களை இறக்குமதி செய்வதன் மூலம் உள்ளூர் சந்தையில் இருக்கும். ஷா ஆலமில் உள்ள குட்இயர் தொழிற்சாலை 1972 இல் செயல்படத் தொடங்கியது. குட்இயர் 1929 முதல் மலாயாவில் தடம் பதித்திருக்கிறது மற்றும் 1985 இல் நாட்டின் முதல் காரான புரோட்டான் சாகாவிற்கு டயர் சப்ளையர்  செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here