பெர்லிஸ் ராஜாவை சமூக ஊடகத்தில் அவமதித்த ஆடவருக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்

கங்கார்:

முஹமட் முஹமட் என்ற பெயருடைய ஒரு முகநூல் பக்கத்தில் பெர்லிஸ் ராஜாவை அவமதிக்கும் வகையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் நண்டு விற்பனையாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று 37 வயதுடைய நபர் அளித்த ஒரு புகாரைத் தொடர்ந்து 41 வயதான சந்தேக நபர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் கெடாவில் உள்ள தாமான் அகாசியா 2, சாங்லுன் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக கங்கார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யுஷரிபுதீன் முகமட் யூசோப் தெரிவித்தார்.

குறித்த நண்டு விற்பனையாளர் இன்று கங்கார் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிபதி அனா ரோசானா முகமட் நோர் இன்று முதல் மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

“இந்த வழக்கு தேசத்துரோக சட்டம் 1948 இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்படும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை, பெர்லிஸின் ராஜா மூடாவின் புகைப்படத்துடன் கூடிய பதாகைகள் சிவப்பு பெயிண்ட் தெளிக்கப்பட்டது தொடர்பிலும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 427 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என்றும், அந்த நண்டு விற்பனையாளருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை விசாரிக்கும்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here