சித்தியவானிலுள்ள கேளிக்கை மையத்திற்கு முன்னால் பலவிதமான போதைப்பொருட்களுடன் ஆடவர் ஒருவர் கைது

ஈப்போ:

சித்தியவானில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியின் முன், காரில் பலவிதமான போதைப்பொருட்களுடன் 28 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் உட்கொண்ட சந்தேகத்தின் பேரில், குறித்த கேளிக்கை மையத்திலிருந்த மொத்தம் 152 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செல்லுபடியாகும் ஆவணங்களின்றி அங்கு ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் பல வெளிநாட்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர் என்று, பேராக் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

பேரா மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் குழு, நேற்று (மார்ச் 10) நள்ளிரவு 12.35 மணிக்கு முதல் சந்தேக நபரைக் கைது செய்தது.

அவரது காரை சோதனை செய்ததில், போதைப்பொருள் கலந்த சாறு என நம்பப்படும் 54.5 கிராம் பொருட்கள் அடங்கிய ஐந்து சிவப்பு நிற பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

“மேலும் ஒரு கருப்பு பிளாஸ்டிக் பாக்கெட்டில் 31.3 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கலந்த சாறு இருந்தது,” என்று அவர் இன்று (மார்ச் 11) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவைதவிர, அவரிடமிருந்து மொத்தம் 14 கிராம் போதைப்பொருள் அடங்கிய ஒன்பது பிளாஸ்டிக் பைகள் மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் அடங்கிய ஒரு அலுமினிய ஃபாயில் பையையும் போலீசார் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு RM2,936 என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டது, அத்தோடு அவருக்கு போதைப்பொருள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பான் முந்தைய குற்றப்பதிவுகளும் உள்ளதாக முகமட் யூஸ்ரி கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைளை போலீசார் தொடர்வதாகவும், குறித்த சந்தேக நபர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here