கோலாலம்பூர்:
மலேசிய சுதந்திரக் கொண்டாட்ட மாதத்தை முன்னிட்டு, பொந்தியான் நகராண்மைக் கழகத்தின் (MPPn) ஓய்வூதியர் ஒருவர் தனது வீட்டை நூற்றுக்கணக்கான தேசியக் கொடிகளால் அலங்கரிக்க ஆண்டிற்குச் சுமார் RM1,000 செலவிட்டு வருகிறார்.
கம்போங் பாரிட் சிலாங்கூரில் உள்ள 70 வயதான சைடோன் மியாட் என்பவரின் இந்த பழைய மரபு வீடானது, பல்வேறு அளவிலான தேசியக் கொடிகளாலும் வண்ணமயமான பூச்செடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு காண்போரைக் கவர்ந்து வருகிறது.
“ஒவ்வொரு ஆண்டும் ஹரி ராயா பண்டிகையை எதிர்பார்ப்பது போல, எங்கள் குடும்பத்தினர் இந்த சுதந்திர மாதத்தைக் உற்சாகத்துடன் எதிர்கொள்கிறோம். கடந்த ஒரு வாரமாக என் மகன் ரிஸுவானுடன் (வயது 35) இணைந்து வீட்டை அலங்கரித்து வருகிறேன்,” என சைடோன் தெரிவித்தார்.
நகராண்மைக் கழகத்தின் லேண்ட்ஸ்கேப் பிரிவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு இந்த அலங்காரங்களைச் செய்துள்ள அவர், தனது தொழில்நுட்பத் திறன்களைத் தனது மகனுக்கும் கற்றுக்கொடுத்துள்ளார்.
சொந்தச் செலவில் இந்த அலங்காரங்களை மேற்கொண்டு வந்தாலும், காயு ஆரா பாசோங், பாரிட் பசிலாம் மற்றும் பாரிட் ஹாஜி அத்னான் ஆகிய வழிகளில் செல்லும் பொதுமக்கள் இவரது வீட்டைப் பார்த்துப் பாராட்டுவது மிகுந்த மனநிறைவைத் தருவதாக அவர் கூறுகிறார்.
பலர் காரை நிறுத்தி வீட்டின் அருகே சென்று பார்ப்பதுடன், புகைப்படங்களும் ‘செல்ஃபி’களும் எடுத்து மகிழ்கின்றனர். இச்செயல் தனது குடும்பத்திற்கு மட்டுமின்றி, அப்பகுதி மக்களிடையே சுதந்திர உணர்வையும் தேசப்பற்றையும் மேலும் வளர்க்க உதவுகிறது என சைடோன் பெருமிதத்துடன் கூறினார்.


























