கோலாலம்பூர்:
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்படவுள்ள ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து இணைப்பு (RTS Link) புக்கிட் சாகார் நிலையக் கட்டமைப்புப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மலேசியா ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் நிறுவனம் அறிவித்துள்ளது.
புக்கிட் சாகார் முனையத்தில் மேம்பட்ட பாதுகாப்பு, தானியங்கி நுழைவுவாயில்கள், நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு மணி நேரத்திற்குப் பத்தாயிரம் பயணிகளை இரு திசைகளிலும் சுமந்து செல்லும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் திட்ட இயக்குநர் சுல்கிஃப்லி முகமட் தெரிவித்தார்.
ஜோகூர்-சிங்கப்பூர் இடையேயான பயண நேரத்தை வெறும் ஐந்து நிமிடங்களாகக் குறைக்கும் இந்த 4 கிலோமீட்டர் நீளப் போக்குவரத்துத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கும் முக்கிய ஆதரவாக விளங்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் தற்போதைய நிலை, செயல்பாட்டுத் தயார்ப்படுத்தல்களை நேரில் ஆய்வு செய்வதற்காகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று புக்கிட் சாகார் நிலையத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சோதனையும், இறுதி கட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















