ஹேம்பர்க்:
பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆறு நாட்கள் உத்தியோகப் பயணமாக கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 15 வரை) ஜெர்மனிக்கு பயணமாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து 45.4 பில்லியன் ரிங்கிட் பொறுமானமுள்ள தொகையை முதலீடு செய்ய அங்குள்ள முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மை, தெளிவான கொள்கைகள், முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் முறையில் அரசு இயந்திரம் செயல்படும் சீரான முறை ஆகியவற்றில் ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அன்வார் இப்ராகிம் கூறினார்.
“அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட சமநிலையிலான ஊக்குவிப்புகளை மலேசியா வழங்குகிறது. ஆனால், அவர்களை எது ஈர்க்கிறது என்றால், நமது அரசியல் நிலைத்தன்மை, தெளிவான கொள்கை முடிவுகள் ஆகியவற்றுடன் திட்ட ஒப்புதல் வழங்கும் முறையில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக விரைந்து செயல்பட விரும்புவது” என்று ஜெர்மனியின் பெர்லின், ஹேம்பர்க் நகரங்களுக்கு மேற்கொண்ட ஆறுநாள் பயண முடிவில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
மலேசியாவின் நிதியமைச்சராகவும் உள்ள அன்வார், மலேசியாவின் எரிசக்தி உருமாற்றக் கொள்கைகளும் புதிய முதலீடுகளை ஈர்க்க உதவியுள்ளன என்றார்.
“உதாரணமாக, பசுமை சார்ந்த கொள்கைகள், எரிசக்தி உருமாற்றம், எரிசக்தி புதுப்பிப்பு, ஹைட்ரஜன், சூரிய சக்தி ஆய்வு ஆகியன மலேசியாவில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியுள்ளன,” என்று அன்வார் விளக்கினார்.
இவற்றுடன், மலேசியா கடைப்பிடிக்கும் நடைமுறை சாத்தியமுள்ள கொள்கைகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா, சீனா போன்ற நாடுகளுடன் கொண்டுள்ள நல்ல உறவு முறை ஆகியவையும் முதலீடுகள் வர உதவி புரிந்துள்ளன என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, மலேசியாவில் 2026ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்துப் பேசிய பிரதமர், அரசாங்கம் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் பரிசீலித்து அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை அறிந்தபின் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இளையர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் தேவையான அனைத்து தரப்பினரிடம் தகவல் கேட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் விளக்கினார்.
“நாம் முதலில் விரிவாக ஆராய வேண்டும். ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இதுபற்றி தான் அமைச்சரவையை நேற்று கலந்து ஆலோசிக்கும்படி கூறியதாகவும் திரு அன்வார் தெரிவித்தார். இதில் அடுத்த வாரம் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமா செய்தித் தகவல் கூறுகிறது.