கோத்தா கினாபாலு:
இன்று (மார்ச் 20) காலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது சில மின் கம்பிகளில் சிக்கிய தீயணைப்பு வீராங்கனை ஒருவர் காயமடைந்தார்.
காலை 10.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், சமந்தா எச்சா சிகா, 36, என்ற தீயணைப்பு வீராங்கனையே மின்சாரம் தாக்கியதில் சுருண்டு விழுந்தார் என்றும், அதன் பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று லிண்டாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் அகுஸ்டாவியா ஜோ குவாசி கூறினார்.
“குறித்த தீயணைப்பு வீராங்கனையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தேவையான சிகிச்சையைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, காலை 10.05 மணியளவில் கம்போங் கெலியங்காவ் 2 மெங்கத்தாலில் வீடு எரிவதாக தமது துறைக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
“சம்பவ இடத்திற்கு வந்தவுடன், ஒரு வீடு, ஒரு சிறிய வளாகம் மற்றும் மூன்று வாகனங்கள் தீப்பிடித்ததை நாங்கள் கண்டோம்,” என்றும், காலை 10.44 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.