ஜோகூர்:
போதைப் பொருள் கடத்தியது தொடர்பில், 33 வயதான சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் மீது ஜனவரி 31ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டதாகவும், இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி, குறித்த சந்தேக நபர் உட்பட மொத்தம் மூன்று சிங்கப்பூரர்கள், ஒரு தாய்லாந்து நாட்டுக்காரர் என நான்கு பேரை ஜோகூர் கைது செய்ததாகவும், அந்த 33 வயது சந்தேக நபரைத் தவிர மற்ற மூவரும் நாளை புதன்கிழமை (பிப்ரவரி 5) வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜோகூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் நண்பர்கள் என்றும், அவர்கள் அனைவரும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்த காவல்துறை, அவர்கள் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, அவர்கள் போதைப் பொருள் மின்சிகரெட்டுகள் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இந்த நடவடிக்கையை கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செய்து வருவதாக காவல்துறை தெளிவுபடுத்தியது.
மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கு ஹெராயின், கெட்டமின் போன்ற ஏழு வகையான போதைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
இந்த போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, அந்த 33 வயது நபர் மீது மேலும் ஒரு குற்றச்செயல் தொடர்பாக ஏற்கனவே தேடப்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
























